வள்ளலார் - ம.பொ.சி பதிப்பகம்
வள்ளலார் - ம.பொ.சி பதிப்பகம் வள்ளலார்
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது.

இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.

பிறப்பு
இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823 இல் பிறந்தவர். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்.
தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

பசியாற்றல்
இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.

சன்மார்க்கச் சிந்தனையாளர்
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ளவடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
படைப்புக்கள்
வள்ளலார் பதிப்பித்தவை
1. சின்மய தீபிகை
2. ஒழிவிலொடுக்கம்
3. தொண்டமண்டல சதகம்
இயற்றிய உரைநடை
1. மனுமுறைகண்ட வாசகம்
2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
திருவருட்பா
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.[5]இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.

அருள் விளக்க மாலை பாடல் (4174)
நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்
இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கண்டன நூல்கள்
வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன.வள்ளலார் மேற் கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றையசைவவாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுத்துக்களையும் புறம் தள்ளினர். எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர். 1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்க ஆரம்பித்தது. 1869 இல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது , இது அருட்பா அல்ல, அது போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.

1904 இல் கதிரைவேல் பிள்ளை வள்ளலாருக்கு எதிராக இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை அவர் எழுதி வெளியிட்டார். இந்நூலுக்கு மறுப்பாக ம.தி. பானுகவி என்பவர், 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்.